கிருத்திகன் கவிதைகள்

Pages

04 July 2011

பதிலற்று நீளும் இரவுகள்அச்சம் நிறைந்த மௌனங்கள்
நம் சொற்களை
சேமித்துப்புதைக்கின்றன

தனிமையில் மெதுவாய்
நகரும் பொழுதுகள்
என் துவிதத்தை
விழுங்கி மாள்கின்றன

ஏதாவது பேசிவிட்டுபோ
என்கின்ற என் குரல் நடுக்கத்தில்
புதைந்துபோகிறது
மொத்த ஆத்மாவும்

ஜன்னல் கம்பிகளால்
சிறை பட்டிருக்கிறது
பரந்து நீளும் இரவு .,

விலகித் தொலைந்திருக்கும் நிலவு
முன்பொரு இரவில்
என்னோடு
கதை பேசிக் கொண்டிருந்தது

குமிழ் ஒளிகளில்
எரிந்துகொண்டிருக்கும் இரவு
பேசித்தீராத என் தனிமையினை
எங்கோ நகர்த்திக்கொண்டிருக்கிறது

உன் பதில்களிற்க்காய் அடங்கியிருக்கும்
என் உயிரை
வார்த்தைகள் அற்ற
உன் உதடுகள் தான்
உறிஞ்சித்துப்புகின்றன

மௌனத்திலும் பிரிவுகளிலும்
கலந்திருக்கின்ற பிரியத்தின்
கோடுகளாய்
தொடர்கிறது நம் பந்தம் ...