கிருத்திகன் கவிதைகள்

Pages

08 April 2010

குட்டி அல்லது கோகிலராஜ்
சகிக்கமுடியாத கனவுகளுடன்
புணரும் இரவுகளாய்
தொடர்கிறது
தனிமையின்
துயர்மிகு நாட்கள்

அழகிய வெளிகளை வரைந்துகொண்ட
உயிர் படர்ந்த உன் இரவுகளை
சன்னம் துளைத்துக்கொண்டது

பாடல்களால்
நீ நனைத்திருந்த வானம்
இரத்தக்கீறல்களாய்
உடைந்து வீழ்ந்தபோது
எம் சொற்களை
காற்றின் வெளி
விலங்கிட்டுக்கொண்டது

பூக்களை தளுவிய புன்னகையின் கதறலை
காலம் விழுங்கியபோது
எம் கவிதைகள்
மரணத்தால் சபிக்கப்பட்டிருந்தன

மரணம் நிரப்பிய தெருக்களில்
நாம் மட்டும்
எதற்க்காக மிஞ்சிப்போனோம்
எஞ்சிய இரவுகளை
கொலை நிறைந்த கனவுகளால்
அடைத்துக்கொள்ளவா

07 April 2010

கடவுள் அற்ற நிலம்
சிறகில்கனத்தபறவையின்

துயரத்தை

காலம் தின்ற

மரணக்கூடுகள் உதிர்த்தன


நொதிந்துபோன
கனவுகளின் வெளியில்
சிதறிய ரத்தம்
கனவின் தாகத்தை களுவி
விலகிக்கொண்டது

கடவுள் அற்ற வெளியில்
யன்னல் உடைத்த நிலம்
விரும்பிக்களித்த
இரவின் நினைவினை
பெருத்த ஏவறைகளால்
நிரப்பிக்கொண்டது.

05 April 2010

பொய்த்துப்போன புன்னகை
சிறுபுள்ளிகளால் நிறப்பமுனைந்த இடைவெளிகளை
என் காதை அறைந்த சப்தம் கிழறியபோது
நீ கடைசியாய் புன்னகைத்ததை
ஒரு அடிமையாய் நான் ரசித்துக்கொள்ளும்
இநத சாம்பல் மேட்டில்
பூக்களின் இருப்பு அவசியமற்றது

நீளத்தெருக்களில்
நீ பதித்த சுவடில் எல்லாம்
என் உயிரும் கொட்டிபோகிறது தோழி
ஆயினும்
நாம் திரிந்த மணல்கள்
குருதி வழியும் என் பாதங்களில்
இப்போது ஒட்டிக்கொள்வதில்லை

உருகி வழியிம் என் கண்ணீரை
ஒரு அடிமையின் கண்ணீராய்
எப்படி உனக்கு நான் பரிசளிக்கப்போகின்றேன்

என் தனிமை இரவுகள்
நகரும்போதெல்லாம்
உனை சுமப்பதாய்ச்சொன்ன
என் முதுகை
ஒரு அடிமையின் முதுகை
மிருகம் ஆக்கிரமித்து கொண்டபோது
உன் உயிர்வலிப்புன்னகை பொய்த்துப்போனது தோழி.

02 April 2010

வருவாதகச்சொன்ன தேவதூதன்.
எம்மை மிருகங்கள் துரத்திக்கொணடடிருந்தன
திசை இருட்டிய வழிகளோடு நாம் ஓடிக்கொண்டிருந்தோம்

என் தாய் அப்போது தேவதூதன் பற்றிய பாடலை
உதிர்த்துக்கொண்டிருந்தாள்
அவள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்தன
புரியாத மொழியில் இருந்த கிறுக்கல்களை
அவள் மொழிபெயர்த்தபோது
நாமும் தேவதூதனை நம்பத்தொடங்கினோம்

குழந்தைகள் வானத்தை பார்த்து கைகூப்பிக்கொண்டார்கள்
என் தாய் நட்சத்திரங்களி அசைவுகளை
நடு இரவில் கணித்துக்கொண்டிருந்தாள்

நாம் தொடர்ந்தும்
திசை இருட்டிய வழிகளோடு ஓடிக்கொண்டிருந்தோம்
எம்மை மிருகங்கள் துரத்திக்கொணடடிருந்தன

பாடல் இல்லாமல் எப்படி தேவதூதன் வருவான்?
யாரோ கேட்கவும் நாம் பாடத்தொடங்கினோம்

எமது நிலங்களை மிருகம் தின்று
துப்பிக்கொண்டிருந்தது
பாடலில் தம்மை மறந்திருந்தவர்களை மிருகம் தின்றபோது
தேவதூதன் அவர்களை அழைத்துவருவான் என தாய் கூறினாள்

எம் திசைகள் முடிந்தபோது
எம்மை மிருகம் தின்று முடித்தபோது
எம் குரல்கள் சத்திழந்துபோயின
அப்போது மிருகத்தின் முன் நாம்
நிர்வாணமாய் இருந்தோம்

ஆயினும் நாம் எம் தாய் சொன்ன தேவதூதனை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்

மறக்கமுடியாத பொழுதொன்றில் தேவதூதர்கள்
வானிலிருந்து வந்தார்கள்

மிருகங்கள் நமக்காய் வந்த
தேவதூதர்களை வணங்கிக்கொண்டன
எம் நிலம் தின்ற மிருகங்கள் துப்பிய எச்சத்தோடு
அவர்கள் புரண்டுகொண்டார்கள்
மிருகத்தின் ஏவறைகளினை அவர்கள் நக்கிக்கொண்டிருந்தார்கள்
மிருகத்தின் கக்கதின் அழுக்குகளையே
அவர்கள் சுரண்டிக்கொண்டிருந்தார்கள்

ஆம் அவர்கள் தேவதூதர்கள் தான்
நாம் கண்டிராத வானத்திலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள்
அவர்கள் மாலைகளுடன் வந்திருந்தார்கள்
அவர்கள் எமைவிடவும் சதை வைத்து அழகாக இருந்தார்கள்
அவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருந்தார்கள்
ஆம் அவர்கள் தேவதூதர்கள் தான்

மீண்டும் நாம் எம் தாய் சொன்ன தேவதூதனுக்காக
பாடத்தொடங்கினோம்.

01 April 2010

உன் வெளி

உன் உடலை நீ
தீயால் வரைந்தபோது
அழுகிய பிண்டங்களாய்
நாம் நிறைந்திருந்தோம்.

பாலைவனமாகிப்போன எம்
வெளிகளில் எல்லாம் உன்
வன்மம் நிறைந்தபோது
எம் முகங்களை நாம் புதைத்துக்கொண்டோம்.

நீ கீறிய சிதையில்
எம் நிறம் மாறிப்போனது.

எம் நாற்றத்தில் தீ
எம்மில் விலகிக்கொண்டது.

உன் பார்வையில் விழிக்கமுடியாமல்
எம் சதையின் சீழ்களை நாம் நக்கிக்கொண்டோம்.

உன் வெளிகளில் நீ சுதந்திரமாய் இருந்தாய்