கிருத்திகன் கவிதைகள்

Pages

04 July 2011

பதிலற்று நீளும் இரவுகள்















அச்சம் நிறைந்த மௌனங்கள்
நம் சொற்களை
சேமித்துப்புதைக்கின்றன

தனிமையில் மெதுவாய்
நகரும் பொழுதுகள்
என் துவிதத்தை
விழுங்கி மாள்கின்றன

ஏதாவது பேசிவிட்டுபோ
என்கின்ற என் குரல் நடுக்கத்தில்
புதைந்துபோகிறது
மொத்த ஆத்மாவும்

ஜன்னல் கம்பிகளால்
சிறை பட்டிருக்கிறது
பரந்து நீளும் இரவு .,

விலகித் தொலைந்திருக்கும் நிலவு
முன்பொரு இரவில்
என்னோடு
கதை பேசிக் கொண்டிருந்தது

குமிழ் ஒளிகளில்
எரிந்துகொண்டிருக்கும் இரவு
பேசித்தீராத என் தனிமையினை
எங்கோ நகர்த்திக்கொண்டிருக்கிறது

உன் பதில்களிற்க்காய் அடங்கியிருக்கும்
என் உயிரை
வார்த்தைகள் அற்ற
உன் உதடுகள் தான்
உறிஞ்சித்துப்புகின்றன

மௌனத்திலும் பிரிவுகளிலும்
கலந்திருக்கின்ற பிரியத்தின்
கோடுகளாய்
தொடர்கிறது நம் பந்தம் ...

23 December 2010

வீரியமற்ற தோள்கள்








மௌனம் நிரப்பிய
வலிகளுக்குள்
புதைந்து போகின்றன
இருள் நாட்கள்

அடிமைகள்
தின்று
கழிக்கும் நாட்களில்
எஞ்சி போகும்
வரலாறுகளை
அதிகாரம் மிகுந்த
உன் சொற்கள்
தீர்மானிக்கின்றன

ரணம் மிகு
நாட்களின்
இருப்பை
காவிச் செல்வதற்காய்
கூனல்களை
ஏற்றுக் கொள்கிறன
வீரியமற்ற தோள்கள்.

20 September 2010

கொலைகள் பற்றி தொடரும் கனவு



கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...

மரணத்தில் எஞ்சிய என்னை
அதட்டிக்கொள்வதால்
சலனமற்ற இரவுகளில் குழையும்
எல்லோரும் எப்படியோ
வெற்றி கொள்ள்கிறார் .

அதிகாரம் கனத்த சொற்களை
பாட மறுத்ததற்க்காய் என்னை
தோர்க்கடித்த எல்லோரும்
உரிமை மீறிய அதட்டலோடு
எப்படியோ தண்டித்து போகின்றார்கள்...

சாட்சிகள் அற்ற நிரபராதியின் கழுத்தை இறுக்க
இன்னமும் எத்தனை கயிறுகளை
இவர்கள் பின்னிக்கொண்டிருக்க போகிறார்கள்

ஆயினும் ..,

கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...

அருகிலிருக்கும் உன்னை
தழுவிக்கொள்ள முடியாமலிருக்கும்
வலியிழந்த கைகளின் பற்றுதலில் நீ
பூரிப்பதாய் முறுவும் பாசாங்குகளில் ,
நிறையும் என் கூனல்
களில் மட்டுமே
நான் எப்போதும் குற்றம் சுமக்கிறேன்...

உயிர் வலி ஓலம் நிறைந்த புழுதியில்
கனமின்றிக் கடந்த எந்த பொழுதுகளை
நீ அசை போட முடியும் ?
சொல் ...