கிருத்திகன் கவிதைகள்

Pages

27 May 2010

கனவுகள் நோக்கி நகரும் குருதி




என்புகள் நெருங்கிச்சிதைந்திருந்த
நினைவு கனத்த பறவையின் நாட்களை
புனைவுகளற்ற சொற்களால் நாம்
கூறிக்கொள்வதற்க்காய் நீ
விலங்குகளை பரிசளித்திருந்தாய்

நாம் சபிக்கப்பட்ட கடவுளின்
நகரத்திலிருந்து வந்திருந்தவர்களால்
பணிந்துபோக மீளவும் பிரார்த்திக்கப்பட்டிருந்தோம்

புதைந்த ஆன்மாக்களின்
குருதி பிசுபிசுத்த கனவுகளை கிளறியபடி வந்திருந்த
உருவம் தாங்கிய கோரங்களின்
சுயபுராணங்களால் எம்
புருவங்கள் வியர்த்துக்கொண்டிருந்தன

தீய்ந்துபோன கனவுகளின்
வெறுமை இரவுக்குள்
கிளிக்கப்பட்ட நிர்வானப்பிண்டங்களோடு
புணர்ந்து கொள்வதற்க்காய்
அலைந்துகொண்டிருந்தவர்களின்
கறைபடிந்த பற்களுள்
உன் பொழுதுகளும் தேய்கிறது

கனவுகள் பற்றி கூறும்போதெல்லாம்

வியந்துபோக மட்டுமே முடிந்தது

வலி நெருக்கிய மரணங்கள் பற்றி அறிந்திராத

கடவுளின் நகரத்திலிருந்து வந்தவர்களால்


வியந்துபோக மட்டுமே முடிகிற
பிறிதொரு ஆத்மாவின் ஆரம்பமாய்,
உன் இரவுகள் பூசியிருந்த கனவின்
வர்ணங்களை சுரண்டிக்கொண்டிருந்தவர்களையும்
தாண்டி நகர்கிறது குருதி .


( செய்தி - நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத் தூபி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது )

21 May 2010

கனவுகள் புதைந்த வெளி




நகர் எரித்த வானரங்களின்
மனிதாபிமான அதட்டலில்
எல்லோரும்
புல்லரித்துப்போயிருந்த போது
பதுங்குகுளிகளை மூடிய
சாம்பல் நகரத்திற்க்கு நாம்
பொதி சுமக்க பிரார்த்திக்கப்பட்டோம்

குருதி கசியும் நிலங்களை நனைத்தபடி
கூசிய கால்கள் நகர்ந்தபோது
தீ நிறைத்து ஓய்ந்து போன
நிசப்த வெளிகள் எமை
மரணம் நோக்கி அழைத்தன

கனவுகள் புதைந்த வெளிகளில்
தோழ் கனத்த பொதிகளின் கூனலை
வானரங்கள் வாய்கிழிந்த
நகைப்புடன் வரவேற்றன

தீ மிதித்த கால்களின்
கொதிப்புக்கள்
தொடர்ந்துகொண்டே இருக்கும்,
நிசப்த வெளிகளுக்குள்மிகுந்த
மரண பயத்துடன்

13 May 2010

தலை தரும் ஆடுகள்




மரணம் நெருக்கிய
பலவீனப்பிண்டங்களை
உன் குரல்வளை நரகம்
சிறைபடுத்திக்கொண்டது

காதை கிளிக்கும் கரங்கள்
விலங்குகளினால் சூடப்பட்டன

கிழறிய பிணங்களின் நாற்றங்களை
உதடுகள் கிளிந்த புன்னகையால் நீ
தளுவிக்கொண்டாய்

விசமாய் பால் சுரந்திராத கணங்களிற்க்காக
உன் தாய் மார்பை அறுத்துக்கொண்டாள்

குருதி கசிந்திருந்த வானம்
உன் வருகையின் பின்பதாய்
இறந்துபோனது

உன் பாடல்களில் நீ
உன்னையும் அடிமையாக்கிக்கொண்டிருந்தாய்

உன் விரல்களில் தெறித்திருந்த
சதைகளின் கனத்தை நீ
உன் குரல்வளைகளால்
நெரித்துக்கொண்டிருப்பதை
அரசன் ரசித்துக்கொண்டிருந்தான்