கிருத்திகன் கவிதைகள்

Pages

23 December 2010

வீரியமற்ற தோள்கள்








மௌனம் நிரப்பிய
வலிகளுக்குள்
புதைந்து போகின்றன
இருள் நாட்கள்

அடிமைகள்
தின்று
கழிக்கும் நாட்களில்
எஞ்சி போகும்
வரலாறுகளை
அதிகாரம் மிகுந்த
உன் சொற்கள்
தீர்மானிக்கின்றன

ரணம் மிகு
நாட்களின்
இருப்பை
காவிச் செல்வதற்காய்
கூனல்களை
ஏற்றுக் கொள்கிறன
வீரியமற்ற தோள்கள்.

20 September 2010

கொலைகள் பற்றி தொடரும் கனவு



கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...

மரணத்தில் எஞ்சிய என்னை
அதட்டிக்கொள்வதால்
சலனமற்ற இரவுகளில் குழையும்
எல்லோரும் எப்படியோ
வெற்றி கொள்ள்கிறார் .

அதிகாரம் கனத்த சொற்களை
பாட மறுத்ததற்க்காய் என்னை
தோர்க்கடித்த எல்லோரும்
உரிமை மீறிய அதட்டலோடு
எப்படியோ தண்டித்து போகின்றார்கள்...

சாட்சிகள் அற்ற நிரபராதியின் கழுத்தை இறுக்க
இன்னமும் எத்தனை கயிறுகளை
இவர்கள் பின்னிக்கொண்டிருக்க போகிறார்கள்

ஆயினும் ..,

கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...

அருகிலிருக்கும் உன்னை
தழுவிக்கொள்ள முடியாமலிருக்கும்
வலியிழந்த கைகளின் பற்றுதலில் நீ
பூரிப்பதாய் முறுவும் பாசாங்குகளில் ,
நிறையும் என் கூனல்
களில் மட்டுமே
நான் எப்போதும் குற்றம் சுமக்கிறேன்...

உயிர் வலி ஓலம் நிறைந்த புழுதியில்
கனமின்றிக் கடந்த எந்த பொழுதுகளை
நீ அசை போட முடியும் ?
சொல் ...

01 September 2010

மிருகத்தைக்காக்கும் கடவுளின் அசரீரிகள்




சொற்கள் நனைந்திருந்த என் பாடலில்
பரிட்சியமற்ற எந்த வார்த்தைகளின்
உறுத்துதலிர்க்காக என்னை நீ
தண்டித்துக்கொண்டிருக்கிறாய்

குருதி வழியும் கால்களிற்க்காக
என் சுவடுகளை அந்நியப்படுத்தும் நீ
களைத்திருந்த என் குரல்வளையினை கீறுவதால்
பலவீனம் மிகுந்திருந்த எனை விலங்கிடுவதால்
துளிர்க்கும் உன் வீரத்தை யாரோடு பகிரப்போகின்றாய்

நினைவு கனத்த பாடலிற்க்காக
எனை விலங்கிடும் உன்னை
அதிகாரப்படுத்தும் அகலம் நிறைந்த
சுவடுகள் கொண்ட உன்னை
சகிக்க முடியாத கொடூரம் நிறைந்த
குழந்தைகள் வீரிடும் முகம் கொண்ட உன்னை
உன்னை மட்டும்
எப்படி கடவுளின் அசரீரிகள் இன்னமும்
காத்துக்கொண்டே இருக்கின்றன

28 August 2010

வலி பூசிய சொற்கள்




மிருகத்துடன் உறங்கிகொண்டிருக்கும்
நடு இரவுகளை விடவும்
கொடுமை மிகுந்த,
கறை படிந்த வன்மத்தை உதிர்க்கும்
வலி பூசிய சொற்களை
அவனிற்கு கொடுத்திருந்தார்கள்

வானம் உடைந்த கதைகளை கூறியவனின்
கொடூரம் நிறைந்த குரல் வளைக்குள்
ஒரு அடிமையின் தருணங்கள்,
உன் நண்பனின் துயர் மிகு பொழுதுகள் ,
அகப்பட்டு துடிப்பதை
நீ எப்படி தாங்கிக்கொள்ள போகின்றாய்

மரணம் பற்றியும்
ஓலம் பற்றியும் பிதற்றிகொள்ளும்
அவன்
நாம் விரும்பிக்களித்த
தித்திப்பின் தருணங்களை மட்டுமேன்
நம்ப மறுக்கின்றான்

கனவுகளிற்க்காய்
விழித்திருந்த உன்னை
உறங்கிக்கொள்வதாய் கூறும்
அவன் அதைரிய வார்த்தைகளை
எனைப்போலவே
நீயும் நம்பிவிடாதே நண்பா


(நண்பன் ஜெயராஜ் இறப்பு பற்றி தொலைபேசி வழி அறிந்தபோது)

27 May 2010

கனவுகள் நோக்கி நகரும் குருதி




என்புகள் நெருங்கிச்சிதைந்திருந்த
நினைவு கனத்த பறவையின் நாட்களை
புனைவுகளற்ற சொற்களால் நாம்
கூறிக்கொள்வதற்க்காய் நீ
விலங்குகளை பரிசளித்திருந்தாய்

நாம் சபிக்கப்பட்ட கடவுளின்
நகரத்திலிருந்து வந்திருந்தவர்களால்
பணிந்துபோக மீளவும் பிரார்த்திக்கப்பட்டிருந்தோம்

புதைந்த ஆன்மாக்களின்
குருதி பிசுபிசுத்த கனவுகளை கிளறியபடி வந்திருந்த
உருவம் தாங்கிய கோரங்களின்
சுயபுராணங்களால் எம்
புருவங்கள் வியர்த்துக்கொண்டிருந்தன

தீய்ந்துபோன கனவுகளின்
வெறுமை இரவுக்குள்
கிளிக்கப்பட்ட நிர்வானப்பிண்டங்களோடு
புணர்ந்து கொள்வதற்க்காய்
அலைந்துகொண்டிருந்தவர்களின்
கறைபடிந்த பற்களுள்
உன் பொழுதுகளும் தேய்கிறது

கனவுகள் பற்றி கூறும்போதெல்லாம்

வியந்துபோக மட்டுமே முடிந்தது

வலி நெருக்கிய மரணங்கள் பற்றி அறிந்திராத

கடவுளின் நகரத்திலிருந்து வந்தவர்களால்


வியந்துபோக மட்டுமே முடிகிற
பிறிதொரு ஆத்மாவின் ஆரம்பமாய்,
உன் இரவுகள் பூசியிருந்த கனவின்
வர்ணங்களை சுரண்டிக்கொண்டிருந்தவர்களையும்
தாண்டி நகர்கிறது குருதி .


( செய்தி - நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத் தூபி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது )

21 May 2010

கனவுகள் புதைந்த வெளி




நகர் எரித்த வானரங்களின்
மனிதாபிமான அதட்டலில்
எல்லோரும்
புல்லரித்துப்போயிருந்த போது
பதுங்குகுளிகளை மூடிய
சாம்பல் நகரத்திற்க்கு நாம்
பொதி சுமக்க பிரார்த்திக்கப்பட்டோம்

குருதி கசியும் நிலங்களை நனைத்தபடி
கூசிய கால்கள் நகர்ந்தபோது
தீ நிறைத்து ஓய்ந்து போன
நிசப்த வெளிகள் எமை
மரணம் நோக்கி அழைத்தன

கனவுகள் புதைந்த வெளிகளில்
தோழ் கனத்த பொதிகளின் கூனலை
வானரங்கள் வாய்கிழிந்த
நகைப்புடன் வரவேற்றன

தீ மிதித்த கால்களின்
கொதிப்புக்கள்
தொடர்ந்துகொண்டே இருக்கும்,
நிசப்த வெளிகளுக்குள்மிகுந்த
மரண பயத்துடன்

13 May 2010

தலை தரும் ஆடுகள்




மரணம் நெருக்கிய
பலவீனப்பிண்டங்களை
உன் குரல்வளை நரகம்
சிறைபடுத்திக்கொண்டது

காதை கிளிக்கும் கரங்கள்
விலங்குகளினால் சூடப்பட்டன

கிழறிய பிணங்களின் நாற்றங்களை
உதடுகள் கிளிந்த புன்னகையால் நீ
தளுவிக்கொண்டாய்

விசமாய் பால் சுரந்திராத கணங்களிற்க்காக
உன் தாய் மார்பை அறுத்துக்கொண்டாள்

குருதி கசிந்திருந்த வானம்
உன் வருகையின் பின்பதாய்
இறந்துபோனது

உன் பாடல்களில் நீ
உன்னையும் அடிமையாக்கிக்கொண்டிருந்தாய்

உன் விரல்களில் தெறித்திருந்த
சதைகளின் கனத்தை நீ
உன் குரல்வளைகளால்
நெரித்துக்கொண்டிருப்பதை
அரசன் ரசித்துக்கொண்டிருந்தான்

08 April 2010

குட்டி அல்லது கோகிலராஜ்




சகிக்கமுடியாத கனவுகளுடன்
புணரும் இரவுகளாய்
தொடர்கிறது
தனிமையின்
துயர்மிகு நாட்கள்

அழகிய வெளிகளை வரைந்துகொண்ட
உயிர் படர்ந்த உன் இரவுகளை
சன்னம் துளைத்துக்கொண்டது

பாடல்களால்
நீ நனைத்திருந்த வானம்
இரத்தக்கீறல்களாய்
உடைந்து வீழ்ந்தபோது
எம் சொற்களை
காற்றின் வெளி
விலங்கிட்டுக்கொண்டது

பூக்களை தளுவிய புன்னகையின் கதறலை
காலம் விழுங்கியபோது
எம் கவிதைகள்
மரணத்தால் சபிக்கப்பட்டிருந்தன

மரணம் நிரப்பிய தெருக்களில்
நாம் மட்டும்
எதற்க்காக மிஞ்சிப்போனோம்
எஞ்சிய இரவுகளை
கொலை நிறைந்த கனவுகளால்
அடைத்துக்கொள்ளவா

07 April 2010

கடவுள் அற்ற நிலம்




சிறகில்கனத்தபறவையின்

துயரத்தை

காலம் தின்ற

மரணக்கூடுகள் உதிர்த்தன


நொதிந்துபோன
கனவுகளின் வெளியில்
சிதறிய ரத்தம்
கனவின் தாகத்தை களுவி
விலகிக்கொண்டது

கடவுள் அற்ற வெளியில்
யன்னல் உடைத்த நிலம்
விரும்பிக்களித்த
இரவின் நினைவினை
பெருத்த ஏவறைகளால்
நிரப்பிக்கொண்டது.

05 April 2010

பொய்த்துப்போன புன்னகை




சிறுபுள்ளிகளால் நிறப்பமுனைந்த இடைவெளிகளை
என் காதை அறைந்த சப்தம் கிழறியபோது
நீ கடைசியாய் புன்னகைத்ததை
ஒரு அடிமையாய் நான் ரசித்துக்கொள்ளும்
இநத சாம்பல் மேட்டில்
பூக்களின் இருப்பு அவசியமற்றது

நீளத்தெருக்களில்
நீ பதித்த சுவடில் எல்லாம்
என் உயிரும் கொட்டிபோகிறது தோழி
ஆயினும்
நாம் திரிந்த மணல்கள்
குருதி வழியும் என் பாதங்களில்
இப்போது ஒட்டிக்கொள்வதில்லை

உருகி வழியிம் என் கண்ணீரை
ஒரு அடிமையின் கண்ணீராய்
எப்படி உனக்கு நான் பரிசளிக்கப்போகின்றேன்

என் தனிமை இரவுகள்
நகரும்போதெல்லாம்
உனை சுமப்பதாய்ச்சொன்ன
என் முதுகை
ஒரு அடிமையின் முதுகை
மிருகம் ஆக்கிரமித்து கொண்டபோது
உன் உயிர்வலிப்புன்னகை பொய்த்துப்போனது தோழி.

02 April 2010

வருவாதகச்சொன்ன தேவதூதன்.




எம்மை மிருகங்கள் துரத்திக்கொணடடிருந்தன
திசை இருட்டிய வழிகளோடு நாம் ஓடிக்கொண்டிருந்தோம்

என் தாய் அப்போது தேவதூதன் பற்றிய பாடலை
உதிர்த்துக்கொண்டிருந்தாள்
அவள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்தன
புரியாத மொழியில் இருந்த கிறுக்கல்களை
அவள் மொழிபெயர்த்தபோது
நாமும் தேவதூதனை நம்பத்தொடங்கினோம்

குழந்தைகள் வானத்தை பார்த்து கைகூப்பிக்கொண்டார்கள்
என் தாய் நட்சத்திரங்களி அசைவுகளை
நடு இரவில் கணித்துக்கொண்டிருந்தாள்

நாம் தொடர்ந்தும்
திசை இருட்டிய வழிகளோடு ஓடிக்கொண்டிருந்தோம்
எம்மை மிருகங்கள் துரத்திக்கொணடடிருந்தன

பாடல் இல்லாமல் எப்படி தேவதூதன் வருவான்?
யாரோ கேட்கவும் நாம் பாடத்தொடங்கினோம்

எமது நிலங்களை மிருகம் தின்று
துப்பிக்கொண்டிருந்தது
பாடலில் தம்மை மறந்திருந்தவர்களை மிருகம் தின்றபோது
தேவதூதன் அவர்களை அழைத்துவருவான் என தாய் கூறினாள்

எம் திசைகள் முடிந்தபோது
எம்மை மிருகம் தின்று முடித்தபோது
எம் குரல்கள் சத்திழந்துபோயின
அப்போது மிருகத்தின் முன் நாம்
நிர்வாணமாய் இருந்தோம்

ஆயினும் நாம் எம் தாய் சொன்ன தேவதூதனை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்

மறக்கமுடியாத பொழுதொன்றில் தேவதூதர்கள்
வானிலிருந்து வந்தார்கள்

மிருகங்கள் நமக்காய் வந்த
தேவதூதர்களை வணங்கிக்கொண்டன
எம் நிலம் தின்ற மிருகங்கள் துப்பிய எச்சத்தோடு
அவர்கள் புரண்டுகொண்டார்கள்
மிருகத்தின் ஏவறைகளினை அவர்கள் நக்கிக்கொண்டிருந்தார்கள்
மிருகத்தின் கக்கதின் அழுக்குகளையே
அவர்கள் சுரண்டிக்கொண்டிருந்தார்கள்

ஆம் அவர்கள் தேவதூதர்கள் தான்
நாம் கண்டிராத வானத்திலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள்
அவர்கள் மாலைகளுடன் வந்திருந்தார்கள்
அவர்கள் எமைவிடவும் சதை வைத்து அழகாக இருந்தார்கள்
அவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருந்தார்கள்
ஆம் அவர்கள் தேவதூதர்கள் தான்

மீண்டும் நாம் எம் தாய் சொன்ன தேவதூதனுக்காக
பாடத்தொடங்கினோம்.

01 April 2010

உன் வெளி





உன் உடலை நீ
தீயால் வரைந்தபோது
அழுகிய பிண்டங்களாய்
நாம் நிறைந்திருந்தோம்.

பாலைவனமாகிப்போன எம்
வெளிகளில் எல்லாம் உன்
வன்மம் நிறைந்தபோது
எம் முகங்களை நாம் புதைத்துக்கொண்டோம்.

நீ கீறிய சிதையில்
எம் நிறம் மாறிப்போனது.

எம் நாற்றத்தில் தீ
எம்மில் விலகிக்கொண்டது.

உன் பார்வையில் விழிக்கமுடியாமல்
எம் சதையின் சீழ்களை நாம் நக்கிக்கொண்டோம்.

உன் வெளிகளில் நீ சுதந்திரமாய் இருந்தாய்


15 March 2010

சபிக்கப்பட்ட ஓலம்






















குருதித்திரையால் மறைக்கப்படும்
எமது
கனவுகளில் - உன்
செருகிய பிண்டங்களில் இருந்தும்
கழரமறுக்கும் சவள்களில்

சன்னம் கீறிய
இதைய வலிகளின்
சபிக்கப்பட்ட ஓலத்தின்
குரல்களிற்க்காய்

எல்லோரினதும் சாளரங்கள்
சாத்தப்படுகின்ற போது

கோர வன்மத்திற்க்கான
உனது
புகைப்படங்கள்
இழித்துநிற்க்கிறன.

கொண்டாடப்படும் உனது
சந்தோசங்களிற்க்காய்
ஆயிரம் குழந்தைகளின்
தாய்ப்பாலை
நீ
தடை செய்கின்றாய்

வெற்றிகொண்ட உன்
இரவு விருந்திற்க்காய்
மெல்லிய பூக்களின்
குருதியை
நீ
ருசிக்கின்றாய்

தலை துண்டிக்கப்பட்டு
ஊருகின்ற
இறுதித்துடிப்பின் வலி
உணா்ந்திருக்கும் புளுவின்
எதிர்பார்ப்பின் மீதும்
நெம்புகோல்களை
செலுத்தும்
நீ
இப்போதும்
சந்தோசப்பட்டுத்தான்கொள்கிறாய்.


அந்தரத்தில் திரியும் அவன்













இரத்தம் வெளிறிப்போன
அவன் சீருடையில்
நட்சத்திரங்கள்
நரகவேதனையை
அனுபவித்துக்கொண்டிருந்தன

அந்தரத்தில்
திரிந்து கொள்வதாய்
அவன்
இறுமாந்து கொண்டான்

தோல்களின்
கனம் மிகுந்த
சப்பாத்துகளின் கீழாய்
நிர்வாணப்பிண்டங்கள்
சிதைந்து கொண்டன

அந்தரத்தில்
திரிந்து கொள்வதாய்
அவன்
இறுமாந்து கொண்டான்.

அவளின் கனவுகள்














சோர்வுகளின் அசதியில்
வெறும் தரை மீதும்
தலையணை இன்றியும்
அயர்ந்து போவாள்

சாமரக்காற்றுக்கள் மேனியைத்தழுவின
அரியனை மீதில் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்
அவளின் ஏவலிற்க்காகவே
உயிர்தறிக்கவும் காத்திருந்தன சேனைகள்

சோர்வுகளின் அசதியில்
வெறும் தரை மீதும்
தலையணை இன்றியும்
அயர்ந்து போவாள்

அந்த தருணங்களின் இடையூறுகள்
ஒரு பெளார்ணமி அழகில் தெறிக்கும்
வானவில்லின் பிரமிப்பை போன்ற
அவளின் கனவுகளை
கலைத்துக்கொண்டேயிருந்தன.