கிருத்திகன் கவிதைகள்

Pages

27 May 2010

கனவுகள் நோக்கி நகரும் குருதி
என்புகள் நெருங்கிச்சிதைந்திருந்த
நினைவு கனத்த பறவையின் நாட்களை
புனைவுகளற்ற சொற்களால் நாம்
கூறிக்கொள்வதற்க்காய் நீ
விலங்குகளை பரிசளித்திருந்தாய்

நாம் சபிக்கப்பட்ட கடவுளின்
நகரத்திலிருந்து வந்திருந்தவர்களால்
பணிந்துபோக மீளவும் பிரார்த்திக்கப்பட்டிருந்தோம்

புதைந்த ஆன்மாக்களின்
குருதி பிசுபிசுத்த கனவுகளை கிளறியபடி வந்திருந்த
உருவம் தாங்கிய கோரங்களின்
சுயபுராணங்களால் எம்
புருவங்கள் வியர்த்துக்கொண்டிருந்தன

தீய்ந்துபோன கனவுகளின்
வெறுமை இரவுக்குள்
கிளிக்கப்பட்ட நிர்வானப்பிண்டங்களோடு
புணர்ந்து கொள்வதற்க்காய்
அலைந்துகொண்டிருந்தவர்களின்
கறைபடிந்த பற்களுள்
உன் பொழுதுகளும் தேய்கிறது

கனவுகள் பற்றி கூறும்போதெல்லாம்

வியந்துபோக மட்டுமே முடிந்தது

வலி நெருக்கிய மரணங்கள் பற்றி அறிந்திராத

கடவுளின் நகரத்திலிருந்து வந்தவர்களால்


வியந்துபோக மட்டுமே முடிகிற
பிறிதொரு ஆத்மாவின் ஆரம்பமாய்,
உன் இரவுகள் பூசியிருந்த கனவின்
வர்ணங்களை சுரண்டிக்கொண்டிருந்தவர்களையும்
தாண்டி நகர்கிறது குருதி .


( செய்தி - நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத் தூபி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது )

2 comments:

  1. அனு அதனுடன் மட்டுமே வாழ்தல் எத்தனை கொடுமை ? எறும்புகளை திங்க விடாதீர்கள் !
    கவிதை கனம்

    ReplyDelete