கிருத்திகன் கவிதைகள்

Pages

08 April 2010

குட்டி அல்லது கோகிலராஜ்
சகிக்கமுடியாத கனவுகளுடன்
புணரும் இரவுகளாய்
தொடர்கிறது
தனிமையின்
துயர்மிகு நாட்கள்

அழகிய வெளிகளை வரைந்துகொண்ட
உயிர் படர்ந்த உன் இரவுகளை
சன்னம் துளைத்துக்கொண்டது

பாடல்களால்
நீ நனைத்திருந்த வானம்
இரத்தக்கீறல்களாய்
உடைந்து வீழ்ந்தபோது
எம் சொற்களை
காற்றின் வெளி
விலங்கிட்டுக்கொண்டது

பூக்களை தளுவிய புன்னகையின் கதறலை
காலம் விழுங்கியபோது
எம் கவிதைகள்
மரணத்தால் சபிக்கப்பட்டிருந்தன

மரணம் நிரப்பிய தெருக்களில்
நாம் மட்டும்
எதற்க்காக மிஞ்சிப்போனோம்
எஞ்சிய இரவுகளை
கொலை நிறைந்த கனவுகளால்
அடைத்துக்கொள்ளவா

No comments:

Post a Comment