கிருத்திகன் கவிதைகள்

Pages

02 April 2010

வருவாதகச்சொன்ன தேவதூதன்.
எம்மை மிருகங்கள் துரத்திக்கொணடடிருந்தன
திசை இருட்டிய வழிகளோடு நாம் ஓடிக்கொண்டிருந்தோம்

என் தாய் அப்போது தேவதூதன் பற்றிய பாடலை
உதிர்த்துக்கொண்டிருந்தாள்
அவள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்தன
புரியாத மொழியில் இருந்த கிறுக்கல்களை
அவள் மொழிபெயர்த்தபோது
நாமும் தேவதூதனை நம்பத்தொடங்கினோம்

குழந்தைகள் வானத்தை பார்த்து கைகூப்பிக்கொண்டார்கள்
என் தாய் நட்சத்திரங்களி அசைவுகளை
நடு இரவில் கணித்துக்கொண்டிருந்தாள்

நாம் தொடர்ந்தும்
திசை இருட்டிய வழிகளோடு ஓடிக்கொண்டிருந்தோம்
எம்மை மிருகங்கள் துரத்திக்கொணடடிருந்தன

பாடல் இல்லாமல் எப்படி தேவதூதன் வருவான்?
யாரோ கேட்கவும் நாம் பாடத்தொடங்கினோம்

எமது நிலங்களை மிருகம் தின்று
துப்பிக்கொண்டிருந்தது
பாடலில் தம்மை மறந்திருந்தவர்களை மிருகம் தின்றபோது
தேவதூதன் அவர்களை அழைத்துவருவான் என தாய் கூறினாள்

எம் திசைகள் முடிந்தபோது
எம்மை மிருகம் தின்று முடித்தபோது
எம் குரல்கள் சத்திழந்துபோயின
அப்போது மிருகத்தின் முன் நாம்
நிர்வாணமாய் இருந்தோம்

ஆயினும் நாம் எம் தாய் சொன்ன தேவதூதனை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்

மறக்கமுடியாத பொழுதொன்றில் தேவதூதர்கள்
வானிலிருந்து வந்தார்கள்

மிருகங்கள் நமக்காய் வந்த
தேவதூதர்களை வணங்கிக்கொண்டன
எம் நிலம் தின்ற மிருகங்கள் துப்பிய எச்சத்தோடு
அவர்கள் புரண்டுகொண்டார்கள்
மிருகத்தின் ஏவறைகளினை அவர்கள் நக்கிக்கொண்டிருந்தார்கள்
மிருகத்தின் கக்கதின் அழுக்குகளையே
அவர்கள் சுரண்டிக்கொண்டிருந்தார்கள்

ஆம் அவர்கள் தேவதூதர்கள் தான்
நாம் கண்டிராத வானத்திலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள்
அவர்கள் மாலைகளுடன் வந்திருந்தார்கள்
அவர்கள் எமைவிடவும் சதை வைத்து அழகாக இருந்தார்கள்
அவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருந்தார்கள்
ஆம் அவர்கள் தேவதூதர்கள் தான்

மீண்டும் நாம் எம் தாய் சொன்ன தேவதூதனுக்காக
பாடத்தொடங்கினோம்.

3 comments: